Monday, July 26, 2010

நாணயம் ...!





மும்பை - கோவை
ரயில் பயணத்தில்
அவரை சந்தித்தேன் ...

தமிழ், ஆங்கிலம்
ஹிந்தி , தெலுகு
சரளமாய் பேசினார் ...

ரயில்வே துறையின்
அலட்சியம் தாண்டி
தமிழக அரசியல்,
உலக பொருளாதாரம் ,
ஆன்மிகம் என
வளர்ந்தது பேச்சு ...

புத்தகங்கள்
குடிப்பவர் போலும்..
விரல் நுனிவரை
வளர்ந்திருந்தது
ஞானம் ...

பிரபாகரன் பற்றி
பேசும் போது
கண்கள் பனித்தன ...

"புரட்சியாளர்கள்
புதைக்கப்படுவதில்லை ..
விதைக்கப்படுகிறார்கள் "
இலங்கை ஒரு
இஸ்ரேல் ஆகும்
என்றார்...

என் ரசனை
அறிந்தவராய்
"தாஸ்தாவெஸ்கி படி
உனக்கு பிடிக்கும்"
என்றார்..

தான் பிக்காசோவின்
பரம காதலன் என்றார்..
சகீர் ஹுசைனை
கெட்ட வார்த்தைகள் கொண்டு
திட்டினார்...

இளையராஜா தான்
இசைக்கடவுள் ..
கவாஸ்கர்
கிரிக்கெட் ஜீனியஸ் என்றார்..
மற்றதுகள் எல்லாம்
பதர்கள் என்றார் ..

கமலின் மன்மத அம்பு..
ட்விட்டரில் ரைட்டர் பேயோன்
ஓபாமாவின் வெளியுறவுக் கொள்கை ...
One Novel Wonder - அருந்ததி ராய்...
ஸ்பெயினின் தடுப்பாட்டம் ..

என்று இன்னும் என்னென்னமோ பேசினார்..

நேரமறியாது தூங்கிப்போனோம் ..

சேலம் வந்ததும்
யாரோ எழுப்பிவிட..
அவசரமாக Upper Berth த்திலிருந்து
கீழிறங்க முனைகையில் ..

நேற்றிரவு நான் தொலைத்து
இருவருமாக தேடிய
ஐந்து ரூபாய்
நாணயமொன்றை
காலால் மிதித்து
மறைத்து..
ஜன்னல் பக்கம்
வெறித்துப் பார்த்துகொண்டிருந்தார்...

"சார் சார்" என்று பல முறை
கூப்பிட்டு பார்த்தும்
நான் இறங்கும் வரை
அவர் என் பக்கம்
திரும்பவேயில்லை ....

2 comments:

மதுரை சரவணன் said...

நாணயம் ...உலகமறிந்தவர் அதனால் நாணயத்தின் மதிப்பு தெரிந்துள்ளது. வாழ்த்துக்கள்

Vignesh said...

apt title!!!:-)