Monday, April 9, 2012

திருவல்லிகேணியில் ஏதோ ஒரு மேன்ஷன்..




திருவல்லிக்கேணியில்,
நீக்கமற நிறைந்திருக்கும்
மேன்ஷன்களின் நிறைந்த
தெருவெங்கும்

ஒரு தீரா வலி,
ஓர் ஏக்கம்,
ஒரு நிறைவேறா ஆசை,
ஒரு கையிலடங்கா கனவு,
ஓர் இனம்புரியா வெறுமை,
ஒரு கையாலாகாதத்தனம்,
ஒரு குற்றவுணர்ச்சி ,
இன்னவென்று எழுதவிட முடியா
ஏதோவொன்று அப்பி கிடக்கின்றது..

வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,
பிழைப்பு தேடி வந்தவர்கள்,
வேலை தேடுபவர்கள்,
சினிமா ஆசைவெறி பிடித்தவர்கள்,
முதிர் கண்ணன்கள்,
நேற்று வயதுக்கு வந்தவர்கள்,
காலம் வீழ்த்திய கிழவர்கள்
இப்படி நிறைய..

அறையினுள்
இரைந்து கிடக்கும்
ஒவ்வொரு சிகரெட் துண்டும்,
காலி மது பாட்டிலும்
ஏதேனும் ஒரு கதை வைத்திருக்கும்.


கையிலிருக்கும் காசுக்கேற்றாற் போல்
முருகன் இட்லி கடையோ,
ரத்னா கபேவோ,
மோனிஷா டிபன் சென்டரோ,
கையேந்தி பவன்வோ.

மனசுகேற்றார் போல்
பார்த்தசாரதி கோயிலோ,
தேவி தியேட்டரோ,
கடற்கரையோரமோ,
ஒரு சிகரெட் பாகேட்டோ.

கண்ணகி சிலையருகே ஒருவள்
கண்ணடிக்கிறாள்.
கடமையும்,காலமும்
கண்ணிய ஆண்களை 
கட்டியே வைத்திருக்கின்றன.

வன்மம் வடியும் அவ்விரவில்
ஒரு கவர்ச்சி நடிகை.
அல்லது ஒரு கற்பனை காதலி.

நேற்று நிச்சயதார்த்தம் முடிந்த
கந்தசாமி அண்ணன்
எல்லோருக்கும் ட்ரீட் வைத்து
மகிழ்ச்சியும், இறுக்கமும்
கலந்த முகத்தோடு
பெட்டிகளை வாசல் வைக்கிறான்.

மஞ்சள் குண்டு பல்புடன் கட்டப்பட்ட
எண்ணெயில் தோய்த்த காகிதமொன்றில்
லைட் பூச்சிகள் ஒவ்வொன்றாக
ஒட்டி உயிரிழந்து கொண்டிருக்க,
புதிதாய் வந்த யாரோ ஒருவன்
கணேஷ் சாரிடம்
கையெழுத்திட்டு முன்பணம்
கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

1 comment:

அனுஷ்யா said...

பின்னிடீங்க... சூப்பர் மாமே...