Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Tuesday, December 16, 2014

குவாட்டர்ஸ் வீடுகள்





அப்பா பணி ஓய்வு பெற்று 
இன்றுடன் இரண்டு மாதங்கள்.
ஒட்டப்படாத நோட்டீசாய்
"இன்றே இவ்வீடு கடைசி"

என்னுடைய பால்யத்தை,
அக்காவுடனான சண்டைகளை,
முதற்காதல் கனவுலகை,
தின்று, விழுங்கி, செரித்து,
நிஜமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது 
இந்த 700 சதுரடிகள்.

சிறுவயது பிரம்படிக்கு 
நான் பயந்தொடுங்கிய மூலை,
ராமர்பானம் தாங்கி நிற்கும் பால்கனி,
அதிகாலை சூரியன் ஏந்திவரும் 
முற்கதவின் சிறு ஓட்டை,
மழைநாளில் ஓதமடிக்கும் 
வேதியல் சமன்பாடுகள் கிறுக்கிய 
என் அறைச் சுவர்.

இப்படி இருபது வருடங்களின் 
ஏதேனும் ஒரு ஞாபகத்தை 
சுமந்து கொண்டிருந்தது 
எங்கள் யாவரையும் 
தாங்கிச் சுமந்த வீடு. 

பேக்கர்ஸ் & மூவர்ஸ் 
ஹாரன் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

விடைபெறும் சகாக்கள் முகத்தில் 
நட்பின் பிரிவைக் காட்டிலும் 
அவர்களின் 'இந்த' நாளுக்கான 
பயம் தான் தென்பட்டது.

படிக்கட்டுகள் எண்ணியபடி 
கீழ் நோக்கிய நடை.

நிரந்தரப் பிரிவிற்கு 
முன்னதான ஒரு தலைகோதலைப் போல,
அடியிலிருக்கும் தபால் பெட்டியை 
ஒரு தடவை திறந்து மூடினேன்.

ஏழாம் வகுப்பில் 
விழுந்து கைய்யொடிந்த 
அந்த இரும்பு கேட்
கடைசி சாத்தலின் போது 
'கிரீச்' சென்றது.

சோகம் இழையோடும் 
புன்னகையை அங்கேயே உதிர்த்துவிட்டு 
திரும்பிப் பாராமல் நடந்து 
மெயின் ரோட்டிருக்கு வந்திருந்தேன்.
கண்ணீரும் கன்னமேட்டை தொட்டிருந்தது.

.....

அடுத்தநாள் அம்மா தினமும் 
சோறு வைக்கும் தெருநாய்,
வெறிச்சோடிய வீட்டைக் கண்டு,
நெடுநேரம் குறைத்துக் கொண்டிருந்ததாய்
பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி 
போன் போட்டு சொன்னார்கள்.


Wednesday, September 25, 2013

யாசிக்கும் மரணம்!






















காற்றில் தவழ்ந்து வந்த ஒரு பழுப்படைந்த டைரிக்குறிப்பு, 
பழைய பள்ளி நண்பனின் அலைபேசி உரையாடல்,
விட்டத்தில் சிறு முட்டைகள் கொண்ட பறவைக் கூடு,
கண் காணா இடத்தே கசிந்து வந்த ஒரு கண்ணதாசன் பாடல்,
"எல்லாம் சில காலம் இதுவும் கடந்து போகும்" என்பது போல் ஒரு வரி,
எதிர்பாராது அழுதுகொண்டே அறையுள் வந்த அடுத்த வீட்டுக் குழந்தை,
வழக்கமாய் வரும் சாயுங்கால பால்காரன்,


இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தாலும் 
அந்த தற்கொலை தடுக்கப்பட்டிருக்கக் கூடும்.

பெருமழை நனைதல்!


Thursday, November 8, 2012

கேசம் கலைந்த இளம்பெண்



யாருமற்ற ஓர் ஒற்றையடிப் பாதை
ஆவி பறக்கும் ஒரு கோப்பை தேநீர்
இறைந்து  கிடக்கும் புத்தகங்கள் 
கலைந்து கிடக்கும் படுக்கை
கேசம் கலைந்த இளம்பெண் 

புகைப்படமெடுக்க 
தோதானதாய் 
வேறொன்றுமில்லை.


Monday, April 9, 2012

திருவல்லிகேணியில் ஏதோ ஒரு மேன்ஷன்..




திருவல்லிக்கேணியில்,
நீக்கமற நிறைந்திருக்கும்
மேன்ஷன்களின் நிறைந்த
தெருவெங்கும்

ஒரு தீரா வலி,
ஓர் ஏக்கம்,
ஒரு நிறைவேறா ஆசை,
ஒரு கையிலடங்கா கனவு,
ஓர் இனம்புரியா வெறுமை,
ஒரு கையாலாகாதத்தனம்,
ஒரு குற்றவுணர்ச்சி ,
இன்னவென்று எழுதவிட முடியா
ஏதோவொன்று அப்பி கிடக்கின்றது..

வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்,
பிழைப்பு தேடி வந்தவர்கள்,
வேலை தேடுபவர்கள்,
சினிமா ஆசைவெறி பிடித்தவர்கள்,
முதிர் கண்ணன்கள்,
நேற்று வயதுக்கு வந்தவர்கள்,
காலம் வீழ்த்திய கிழவர்கள்
இப்படி நிறைய..

அறையினுள்
இரைந்து கிடக்கும்
ஒவ்வொரு சிகரெட் துண்டும்,
காலி மது பாட்டிலும்
ஏதேனும் ஒரு கதை வைத்திருக்கும்.


கையிலிருக்கும் காசுக்கேற்றாற் போல்
முருகன் இட்லி கடையோ,
ரத்னா கபேவோ,
மோனிஷா டிபன் சென்டரோ,
கையேந்தி பவன்வோ.

மனசுகேற்றார் போல்
பார்த்தசாரதி கோயிலோ,
தேவி தியேட்டரோ,
கடற்கரையோரமோ,
ஒரு சிகரெட் பாகேட்டோ.

கண்ணகி சிலையருகே ஒருவள்
கண்ணடிக்கிறாள்.
கடமையும்,காலமும்
கண்ணிய ஆண்களை 
கட்டியே வைத்திருக்கின்றன.

வன்மம் வடியும் அவ்விரவில்
ஒரு கவர்ச்சி நடிகை.
அல்லது ஒரு கற்பனை காதலி.

நேற்று நிச்சயதார்த்தம் முடிந்த
கந்தசாமி அண்ணன்
எல்லோருக்கும் ட்ரீட் வைத்து
மகிழ்ச்சியும், இறுக்கமும்
கலந்த முகத்தோடு
பெட்டிகளை வாசல் வைக்கிறான்.

மஞ்சள் குண்டு பல்புடன் கட்டப்பட்ட
எண்ணெயில் தோய்த்த காகிதமொன்றில்
லைட் பூச்சிகள் ஒவ்வொன்றாக
ஒட்டி உயிரிழந்து கொண்டிருக்க,
புதிதாய் வந்த யாரோ ஒருவன்
கணேஷ் சாரிடம்
கையெழுத்திட்டு முன்பணம்
கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

Sunday, May 15, 2011

ஆட்சி மாற்றம்..!




தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட்டுவிட்டன.

ஆங்காங்கே
மழைகாளான்கள் போல
சில நாகராஜ சோழன்களை
காண முடிகிறது..

போலீஸ் ஈக்கள்
மொய்த்த அச்சாலை
வெறிச்சோடி
நிசப்தமாயிருந்தது.

"முன்னாள்" சேர்க்கப்பட்ட
அரசியல்வாதியின்
வீட்டு நாய்வாலில்
மட்டுமே கொஞ்சமேனும் நன்றி
மிச்சமிருக்கிறது.

நாளேடுகளில்
இதுநாள்வரையில்
பிரபல நடிகையாய்
இருந்தவள்
நாளை முதல்
மாஜி- மந்திரியின்
காதலி எனப்படுவாள் .

ஐந்தாண்டுகளாய்
வெறி கொண்டிருந்த
கண்ணகியின் கண்கள்
சாந்தமாயிருக்கின்றன..
ஒருவித பயம் அப்பியிருக்கிறது.
நீட்டியிருக்கும்
இடக்கைக்கு
அருங்காட்சியகத்தில்
சற்றே ஒய்வு கொடுக்கப்படலாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் உள்வந்தவர்
அவசர சிகிச்சை பிரிவிலிருந்து
வெளி கொணர்வரப்படுகிறார்.
பத்தோடு பதினொன்றாக
படுக்க வைக்கப்படக்கூடும்.

நாளை காலை
பழையன கழிதலும்,
புதியன புகுதலும்,
அரசு அதிகாரிகளின்
கைப்பேசி புத்தகங்களில்
பல மாற்றங்கள் நேரிடும்.

ஆசிரியை அக்கா
அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாள்.

புதிய செயலகத்தில்
டீக்கடையை குத்தகைக்கு எடுத்தவனும்,
கட்டிட காண்ட்ராக்ட்காரனும்,
ஏதோ ஒரு சேரியின் மூலையில்
இடிந்துபோய்
உட்கார்ந்திருந்தனர் .

இங்கே இடம்பெறாதோர்
யாவரும் நாளை தங்கள்
வசதிக்கேற்ப
ரோட்டோரப் பாட்டி கடையிலோ,
கையேந்தி தள்ளுவண்டியிலோ,
வசந்த பவனிலோ,
சரவண பவனிலோ ,
வழக்கம் போல
வெண்பொங்கலும், வடையும்
முடிந்தபின்னர்,
கை கழுவிட்டு
தத்தமது வேலைகளை பார்க்க
போய்க்கொண்டிருப்பர்.

Sunday, February 20, 2011

யாரோ ஒருவன்...




அலுவலகம் செல்லும்
நாள்தோறும்
தோள்பையில்
மடிக்கணிணியுடன்
சில முகமூடிகளையும்
எடுத்துச் செல்கிறேன் ...

வழியெங்கும் மழை..
நனைந்தழிந்து போன
தன் முதற்கோலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்
சாலையோரச்
சிறுமி ஒருவள் ...

அகண்ட பாத்திரமொன்றில்
சேர்ந்திருந்த மழைநீரை
ஓங்கி அறைந்து
அழுதிருந்தாள்..

கருணையே வடிவான
முகமொன்றை
தேடியணிந்தேன்..
காகிதமொன்று
கத்திகப்பலானது ...
சிரித்தாள்..
சிரித்தேன்..
நகர்ந்தேன்.

வீதி வந்த
வயதான தாயொருத்தி
கையேந்தினாள் .
காசு வேண்டாம் , சோறு வேணும்
என்றாள்..
மணிக்கட்டு 8:30
என்றது..

இறுக்கமான முகமொன்றை
அணிந்துக்கொண்டு
இருபது ரூபாய் தந்து
அவ்விடம் தொலைந்தேன்..

பத்தடிக்கு அப்பால்
அதேபோல் இன்னொரு
முதியவர்..
மாதக் கடைசியாதலால்
கண்டும் காணமல்
அலட்சிய முகமொன்றுடன்
கடந்து போனேன்...

நேற்று முன்தினம்,
குடிபோதையில்
ஐம்பது ரூபாய் சொச்சம்
இனாம் கொடுத்த ,
சலாம் வைத்து
தலை சொரிந்த
அஞ்சப்பர் மீசைக்காரன்
நினைவில் வந்து போனான்..

அலுவலகம்
நுழைந்தவுடன்
பொய்யாய் புன்சிரித்த
முகமொன்று
மதியம் வரை
தேவை பட்டது ...

அதுவரையில்
கண்ணீர் சிந்தும்,
காது வரை சிரிக்கும்,
கன்ன மேடுகள் துடிக்கும்,
பாசம் புரிபடும்,
சிறுமை கண்டு கொதிக்கும்,
பாதம் பார்க்கும்,
செவிகள் விரிந்த,
கண்கள் சிவந்த,
தாழ்ந்து நடக்கா,
கீழோர்க்கஞ்சா முகங்கள்
என் சிறு பையினுள்
ஒன்றுடன் ஒன்று
என்ன பேசிக்கொண்டன
என்பதை நானறியேன்..

வழியில் கண்ட
முதிர் பெண்ணொருத்தி
இறக்கி கட்டிய சேலையும்,
இன்ன பிற
கவனசிதறல்களையும்
சுமந்து கொண்டு
கடந்து போனாள்...

சற்று நேரத்தில்
அலவலக ஒதுக்கத்தில்
முகம்கழுவி
கண்ணாடிமுன்
நிமிர்ந்து பார்கிறேன் ..

நான் இதுவரை கண்டிராத
யாரோ ஒருவன்
சிரித்தபடி
கடைவாயில்
காமம் ஒழுக
நின்றிருந்தான் ...!


Saturday, January 15, 2011

ஸ்பெஷல் தரிசனம்




கோரிக்கைகள்
ஒன்றாயிருப்பினும் ,
பணம் படைத்தவர்களுக்கு
மட்டும்
ஸ்பெஷல் தரிசனம்
தரும் கடவுளே,

உனக்கும்
விலைமகளுக்கும்
என்னவே
வித்தியாசம்??


Monday, July 26, 2010

நாணயம் ...!





மும்பை - கோவை
ரயில் பயணத்தில்
அவரை சந்தித்தேன் ...

தமிழ், ஆங்கிலம்
ஹிந்தி , தெலுகு
சரளமாய் பேசினார் ...

ரயில்வே துறையின்
அலட்சியம் தாண்டி
தமிழக அரசியல்,
உலக பொருளாதாரம் ,
ஆன்மிகம் என
வளர்ந்தது பேச்சு ...

புத்தகங்கள்
குடிப்பவர் போலும்..
விரல் நுனிவரை
வளர்ந்திருந்தது
ஞானம் ...

பிரபாகரன் பற்றி
பேசும் போது
கண்கள் பனித்தன ...

"புரட்சியாளர்கள்
புதைக்கப்படுவதில்லை ..
விதைக்கப்படுகிறார்கள் "
இலங்கை ஒரு
இஸ்ரேல் ஆகும்
என்றார்...

என் ரசனை
அறிந்தவராய்
"தாஸ்தாவெஸ்கி படி
உனக்கு பிடிக்கும்"
என்றார்..

தான் பிக்காசோவின்
பரம காதலன் என்றார்..
சகீர் ஹுசைனை
கெட்ட வார்த்தைகள் கொண்டு
திட்டினார்...

இளையராஜா தான்
இசைக்கடவுள் ..
கவாஸ்கர்
கிரிக்கெட் ஜீனியஸ் என்றார்..
மற்றதுகள் எல்லாம்
பதர்கள் என்றார் ..

கமலின் மன்மத அம்பு..
ட்விட்டரில் ரைட்டர் பேயோன்
ஓபாமாவின் வெளியுறவுக் கொள்கை ...
One Novel Wonder - அருந்ததி ராய்...
ஸ்பெயினின் தடுப்பாட்டம் ..

என்று இன்னும் என்னென்னமோ பேசினார்..

நேரமறியாது தூங்கிப்போனோம் ..

சேலம் வந்ததும்
யாரோ எழுப்பிவிட..
அவசரமாக Upper Berth த்திலிருந்து
கீழிறங்க முனைகையில் ..

நேற்றிரவு நான் தொலைத்து
இருவருமாக தேடிய
ஐந்து ரூபாய்
நாணயமொன்றை
காலால் மிதித்து
மறைத்து..
ஜன்னல் பக்கம்
வெறித்துப் பார்த்துகொண்டிருந்தார்...

"சார் சார்" என்று பல முறை
கூப்பிட்டு பார்த்தும்
நான் இறங்கும் வரை
அவர் என் பக்கம்
திரும்பவேயில்லை ....

Tuesday, July 13, 2010

ஒற்றை ரோஜா...


எண்பதுகளில் வந்த
முரட்டு உருவமொன்று
சடன் பிரேக் போட்டு
சற்றே லாவகமாக
வளைந்து செல்கிறது ....

பில்லியனில்
உட்கார்ந்திருக்கும்
புது மனைவி
கணவனின் காதில்
எதையோ
கிசுகிசுக்கிறாள் ...

மாநரக ஓட்டுனர்கூட
Lane Discipline ஐ
சிறிதே மறந்து
இரு சக்கரங்களுக்கு
இடையே விட்டு
கவனமாக
ஓட்டிச் செல்கிறார் ..

சாலையின் அந்தப்பக்கம்
பைத்தியம் என்று
முத்திரை குத்தப்பட்டவர்
கண் இமைக்காமல்
கூரிய பார்வை
பார்க்கிறார்...

நெடுஞ்சாலையில்
விழுந்து கிடக்கிறது
சற்றுமுன் பூத்தவோர்
ஒற்றை ரோஜா..

நான் இதுவரை கண்டது
பழைய காதலின்
மிச்சமா??
மனிதத்தின்
எச்சமா ?

விடை தெரியாமல்,
திரும்பிப் பார்த்துக்கொண்டே
கடந்து போகிறேன்
நானும் !!!....



Saturday, December 26, 2009

கருகும் ரோஜா...





மெல்லிய புடவையும் ,
உடையும் பூவுமாய்,
இவளை கடக்கும்
போதெலாம்
ஏனோ வீசும்
கருகும் ரோஜா வாசம்...

உதட்டோரச் சாயமாய்
உவர்த்து வழிகிறது
கலியுக ராமர்களுக்கான
காமம் !

பசிக்கு போர்த்தியிருந்த
ஈரத் துணியையும்
அவிழ்த்தெறிந்து
எள்ளி நகைக்கிறது
வாழ்க்கை...

இதோ இங்கே
சில மேல்வயிறுகள்
நிரப்ப தன்
அடிவயிற்றை
அடகு வைக்கிறாள் ...

அம்மணமாய்
கிடக்கும் போதும்
அம் மனம்
நினைப்பது யாவும்
நொண்டிக் கணவனும்,
சவலைக் குழந்தையும்
பற்றித் தான் ...

உடல் தேவையும்,
உள்ளத் தேவையும்
உறவாட..

பொய்யாய் சிரிக்கிறாள்,
பொய்யாய் அணைக்கிறாள்,
பொய்யாய் உச்சமடைகிறாள் ..

எவனோ ஒருவனுக்கு
தற்காலிகமாய்
இரையாகிறாள் ...

தெய்வத்தாலும் ஆகாது
இவள் வாழ்வின்
துயர் துடைக்க,
உண்மையில்
'மெய்' வருத்தி
கூலி பெறுபவள்
இவள் மட்டுமே...

வயிற்றிலிருக்கும்
குழந்தைக்கு அங்கே
தான் காதல்கொண்ட
கதைகள் சொல்லி
மனைவி வளர்க்க ,

அவள்தன் காதலை,
காமமாய்
சுருங்கிய சிறு பையில்
இவள் கட்டிலுக்கடியில் ,
விட்டுச் செல்கிறது
ஒரு மிருகம் ...

முதுகின்
நகக் கீறல்களோ ,
மார்பில் பதிந்த
பற்தடங்களோ ,
இவளை பாதிக்கவில்லை ...

பழைய ரூபாய் நோட்டின்
வாசம் முகர்ந்து சற்றே
கண் மூடுகிறாள் ...

முன்னேற்றி முடி
காற்றிலாட,
ஆழ்ந்து தூங்குகிறது
அக்குழந்தை ....!!



புறம் பேசும்,
இவ்வுலகில்
எவர் பற்றியும்
எனக்கும்
கவலையில்லை ...

கண்டவனின்
பரவசத்திலும்
கண் மூடி ,
கணவனையோ,
காதலனையோ ,
நினைக்கும் ,
எந்தவொரு
விலைமகளும்
கண்ணகி தான் !!!



உரையாடல் போட்டிக்காக

போட்டியில் பங்கேற்கும் மற்ற கவிதைகள்


Flickr Link

Monday, September 28, 2009

முரண்




காதை பிடித்து
தூக்கினாலோ ,
கழுத்தை பிடித்து
திருகினாலோ ,
அது குழந்தையென
தெரிந்து ,
அமைதி காக்கிறது
குட்டி பூனையோ,
நாயோ !!!

சற்று முன்
கண்ணயர்ந்த
அன்னையோ ,
சற்றே தள்ளிவிட்டு ,
ஏதோ முணுமுணுக்கிறாள் !!

ஏதும் புரியாமல்
மெதுவாக
அழத் தொடங்குகிறது
அச்சிறு குழந்தை !!

Friday, August 28, 2009

God is Great !!


ஏறி நின்று மிதித்தும்,
அங்குலமாய் நகரும்,
ஆட்டோ ரிக்க்ஷா
ஓட்டுபவரின்
டி - ஷர்ட் வாசகம் கூட
God is Great !