Tuesday, December 16, 2014

குவாட்டர்ஸ் வீடுகள்





அப்பா பணி ஓய்வு பெற்று 
இன்றுடன் இரண்டு மாதங்கள்.
ஒட்டப்படாத நோட்டீசாய்
"இன்றே இவ்வீடு கடைசி"

என்னுடைய பால்யத்தை,
அக்காவுடனான சண்டைகளை,
முதற்காதல் கனவுலகை,
தின்று, விழுங்கி, செரித்து,
நிஜமாய் சிரித்துக் கொண்டிருக்கிறது 
இந்த 700 சதுரடிகள்.

சிறுவயது பிரம்படிக்கு 
நான் பயந்தொடுங்கிய மூலை,
ராமர்பானம் தாங்கி நிற்கும் பால்கனி,
அதிகாலை சூரியன் ஏந்திவரும் 
முற்கதவின் சிறு ஓட்டை,
மழைநாளில் ஓதமடிக்கும் 
வேதியல் சமன்பாடுகள் கிறுக்கிய 
என் அறைச் சுவர்.

இப்படி இருபது வருடங்களின் 
ஏதேனும் ஒரு ஞாபகத்தை 
சுமந்து கொண்டிருந்தது 
எங்கள் யாவரையும் 
தாங்கிச் சுமந்த வீடு. 

பேக்கர்ஸ் & மூவர்ஸ் 
ஹாரன் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

விடைபெறும் சகாக்கள் முகத்தில் 
நட்பின் பிரிவைக் காட்டிலும் 
அவர்களின் 'இந்த' நாளுக்கான 
பயம் தான் தென்பட்டது.

படிக்கட்டுகள் எண்ணியபடி 
கீழ் நோக்கிய நடை.

நிரந்தரப் பிரிவிற்கு 
முன்னதான ஒரு தலைகோதலைப் போல,
அடியிலிருக்கும் தபால் பெட்டியை 
ஒரு தடவை திறந்து மூடினேன்.

ஏழாம் வகுப்பில் 
விழுந்து கைய்யொடிந்த 
அந்த இரும்பு கேட்
கடைசி சாத்தலின் போது 
'கிரீச்' சென்றது.

சோகம் இழையோடும் 
புன்னகையை அங்கேயே உதிர்த்துவிட்டு 
திரும்பிப் பாராமல் நடந்து 
மெயின் ரோட்டிருக்கு வந்திருந்தேன்.
கண்ணீரும் கன்னமேட்டை தொட்டிருந்தது.

.....

அடுத்தநாள் அம்மா தினமும் 
சோறு வைக்கும் தெருநாய்,
வெறிச்சோடிய வீட்டைக் கண்டு,
நெடுநேரம் குறைத்துக் கொண்டிருந்ததாய்
பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி 
போன் போட்டு சொன்னார்கள்.


No comments: