Wednesday, June 22, 2011

ஆதலினால் காதல் செய்வீர் !




மேற்கு தொடர்ச்சி காடுகளில்
ஒரு மலை வாசஸ்தலத்தின்
கொண்டை ஊசி வளைவுகளை
லாவகமாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அரசுப் பேருந்து.
அவள் கண்ணீரால்
நனைந்திருக்கிறது
இவன் வலது தோள்சட்டை .

கிராமமொன்றின்
மருந்துக் கடையில்
நடுங்கியபடியே
நெற்பயிருக்கென சொல்லி
பால்டாயில் வாங்கிகொண்டிருக்கிறது
தோற்றுப்போன ஒரு குரல்.

அடித்துப் பெய்த பேய்மழைக்கு
அடுத்த நாளில்
பதினாறு கமான் பாலத்தின் மேநின்று
காட்டாற்று வெள்ளத்தை
வெறித்து பார்க்கின்றன
கண்ணீர் தளும்பும்
கண்கள் நான்கு.

அடுக்குமாடி கட்டிடமொன்றின்
27 வது மாடியில்
மின்விசிறிக்கேற்ப
இடவலமாக
உருண்டுகொண்டிருக்கிறது
சற்றுமுன் காலியான ஒரு
தூக்க மாத்திரை குப்பி.

இரு கைகள்
குளிர் ஆசுவாசம் கொண்டிருக்க
இன்னுமிரண்டு படபடவென
நேசத்தின் வேதனையை
காற்றில் கிறு
க்கிக்கொண்டிருந்தன
கண்கள் நிலைகொண்டிருந்தன.

எங்கெல்லாமோ சுற்றிதிரிந்து
சனத்திரள் மிகுந்த நிலையத்தில்
குலுங்கி நிற்கிறது
இளரத்தம் தோய்ந்த
ஒரு பழைய என்ஜின் பெட்டி...!

2 comments:

vaishnavi jai said...

மனசுக்குள் எங்கோ வலிக்குது :(

vaishnavi jai said...

மனசுக்குள் எங்கோ வலிக்குது :(