
தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட்டுவிட்டன.
ஆங்காங்கே
மழைகாளான்கள் போல
சில நாகராஜ சோழன்களை
காண முடிகிறது..
போலீஸ் ஈக்கள்
மொய்த்த அச்சாலை
வெறிச்சோடி
நிசப்தமாயிருந்தது.
"முன்னாள்" சேர்க்கப்பட்ட
அரசியல்வாதியின்
வீட்டு நாய்வாலில்
மட்டுமே கொஞ்சமேனும் நன்றி
மிச்சமிருக்கிறது.
நாளேடுகளில்
இதுநாள்வரையில்
பிரபல நடிகையாய்
இருந்தவள்
நாளை முதல்
மாஜி- மந்திரியின்
காதலி எனப்படுவாள் .
ஐந்தாண்டுகளாய்
வெறி கொண்டிருந்த
கண்ணகியின் கண்கள்
சாந்தமாயிருக்கின்றன..
ஒருவித பயம் அப்பியிருக்கிறது.
நீட்டியிருக்கும்
இடக்கைக்கு
அருங்காட்சியகத்தில்
சற்றே ஒய்வு கொடுக்கப்படலாம்.
காப்பீட்டுத் திட்டத்தில் உள்வந்தவர்
அவசர சிகிச்சை பிரிவிலிருந்து
வெளி கொணர்வரப்படுகிறார்.
பத்தோடு பதினொன்றாக
படுக்க வைக்கப்படக்கூடும்.
நாளை காலை
பழையன கழிதலும்,புதியன புகுதலும்,
அரசு அதிகாரிகளின்
கைப்பேசி புத்தகங்களில்
பல மாற்றங்கள் நேரிடும்.
ஆசிரியை அக்கா
அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாள்.
புதிய செயலகத்தில்
டீக்கடையை குத்தகைக்கு எடுத்தவனும்,
கட்டிட காண்ட்ராக்ட்காரனும்,
ஏதோ ஒரு சேரியின் மூலையில்
இடிந்துபோய்
உட்கார்ந்திருந்தனர் .
இங்கே இடம்பெறாதோர்
யாவரும் நாளை தங்கள்
வசதிக்கேற்ப
ரோட்டோரப் பாட்டி கடையிலோ,
கையேந்தி தள்ளுவண்டியிலோ,
வசந்த பவனிலோ,
சரவண பவனிலோ ,
வழக்கம் போல
வெண்பொங்கலும், வடையும்
முடிந்தபின்னர்,
கை கழுவிட்டு
தத்தமது வேலைகளை பார்க்க
போய்க்கொண்டிருப்பர்.
4 comments:
போலீஸ் காரர்களும்...
கட்சி மாற வேண்டும் !!!
சினிமா காரர்களும்...
கட்சி மாற வேண்டும் !!!
இன்னும் எத்தனை பேர்????
last few for ppl like u:-)
Good one.. oru 360 view! :)
ஆசிரியை அக்கா
அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாள்.
ha ha :-))
nice na !!
Post a Comment