Sunday, February 20, 2011

யாரோ ஒருவன்...




அலுவலகம் செல்லும்
நாள்தோறும்
தோள்பையில்
மடிக்கணிணியுடன்
சில முகமூடிகளையும்
எடுத்துச் செல்கிறேன் ...

வழியெங்கும் மழை..
நனைந்தழிந்து போன
தன் முதற்கோலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்
சாலையோரச்
சிறுமி ஒருவள் ...

அகண்ட பாத்திரமொன்றில்
சேர்ந்திருந்த மழைநீரை
ஓங்கி அறைந்து
அழுதிருந்தாள்..

கருணையே வடிவான
முகமொன்றை
தேடியணிந்தேன்..
காகிதமொன்று
கத்திகப்பலானது ...
சிரித்தாள்..
சிரித்தேன்..
நகர்ந்தேன்.

வீதி வந்த
வயதான தாயொருத்தி
கையேந்தினாள் .
காசு வேண்டாம் , சோறு வேணும்
என்றாள்..
மணிக்கட்டு 8:30
என்றது..

இறுக்கமான முகமொன்றை
அணிந்துக்கொண்டு
இருபது ரூபாய் தந்து
அவ்விடம் தொலைந்தேன்..

பத்தடிக்கு அப்பால்
அதேபோல் இன்னொரு
முதியவர்..
மாதக் கடைசியாதலால்
கண்டும் காணமல்
அலட்சிய முகமொன்றுடன்
கடந்து போனேன்...

நேற்று முன்தினம்,
குடிபோதையில்
ஐம்பது ரூபாய் சொச்சம்
இனாம் கொடுத்த ,
சலாம் வைத்து
தலை சொரிந்த
அஞ்சப்பர் மீசைக்காரன்
நினைவில் வந்து போனான்..

அலுவலகம்
நுழைந்தவுடன்
பொய்யாய் புன்சிரித்த
முகமொன்று
மதியம் வரை
தேவை பட்டது ...

அதுவரையில்
கண்ணீர் சிந்தும்,
காது வரை சிரிக்கும்,
கன்ன மேடுகள் துடிக்கும்,
பாசம் புரிபடும்,
சிறுமை கண்டு கொதிக்கும்,
பாதம் பார்க்கும்,
செவிகள் விரிந்த,
கண்கள் சிவந்த,
தாழ்ந்து நடக்கா,
கீழோர்க்கஞ்சா முகங்கள்
என் சிறு பையினுள்
ஒன்றுடன் ஒன்று
என்ன பேசிக்கொண்டன
என்பதை நானறியேன்..

வழியில் கண்ட
முதிர் பெண்ணொருத்தி
இறக்கி கட்டிய சேலையும்,
இன்ன பிற
கவனசிதறல்களையும்
சுமந்து கொண்டு
கடந்து போனாள்...

சற்று நேரத்தில்
அலவலக ஒதுக்கத்தில்
முகம்கழுவி
கண்ணாடிமுன்
நிமிர்ந்து பார்கிறேன் ..

நான் இதுவரை கண்டிராத
யாரோ ஒருவன்
சிரித்தபடி
கடைவாயில்
காமம் ஒழுக
நின்றிருந்தான் ...!


4 comments:

நிரூபன் said...

வழியெங்கும் மழை..
நனைந்தழிந்து போன
தன் முதற்கோலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்
சாலையோரச்
சிறுமி ஒருவள் .//

வணக்கம் சகோதரா.
இது டாப்புங்க பாஸ் அருமையான கவிதை. ஒரு மழை நாள் மாலைப் பொழுதோடு, ஒரு பெண்ணின் மனக் கண்ணாடி விம்பமாகக் கவிதையை யாத்திருக்கிறீர்கள். யாரோ ஒருவன் - சமூகத்தில் ஒளிந்து வாழும் எம்முள் ஒருவன்.

Maruthu said...

அருமையான பதிவு

Sathyaseelan said...

நண்பா ! அருமை தமிழ் ஆளுமை அழகு !!

Venkata Ramanan S said...

நன்றிகள் பல நண்பர்களே :)